search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோனியா காந்தி"

    • 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
    • வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக முதல்வரிடம் சோனியா காந்தி வலியுறுத்துவார் என அவர் என்னிடம் உறுதி அளித்தார்.

    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டம் தர்மஸ்தலா அருகே உள்ள பங்காலா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தப்ப கவுடா. இவரது மனைவி குசுமாவதி. இந்த தம்பதியின் மகள் கல்லூரியில் படித்து வந்தார். அவர் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

    இது தொடர்பான வழக்கை முதலில் கர்நாடக போலீசாரும் பின்னர் மாநில சிஐடி போலீசாரும் விசாரித்தனர். அதன் பிறகு இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட நபர் இந்த வழக்கிலிருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டார். கர்நாடகாவில் இப்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் தாய் குசுமாவதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது மகேஷ் ஷெட்டி (கர்நாடகா) மற்றும் யோகிதா பயானா உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் உடன் இருந்தனர். இதையடுத்து, சோனியாவின் உதவியாளர் குசுமாவதியை சந்தித்து அவருடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார்.இதுகுறித்து குசுமாவதி கூறும்போது, "சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடைய உதவியாளர் ஒருவர் என்னுடைய கோரிக்கைகளை கேட்ட றிந்தார். அப்போது என் மகள் கொல்லப்பட்ட வழக்கில் நீதி வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தேன்.

    இதையடுத்து, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக முதல்வரிடம் சோனியா காந்தி வலியுறுத்துவார் என அவர் என்னிடம் உறுதி அளித்தார். என்னுடைய கோரிக்கைக்கு செவி சாய்த்த சோனியாவுக்கு நன்றி. எனது மகள் அனுபவித்த கொடுமைக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன்" என்றார்.

    • தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
    • பா.ஜ.க. எல்லா மாநிலங்களையும் போதை பழக்கங்கள் உள்ள மாநிலமாக மாற்றுவதற்காக முயற்சிக்கிறார்கள்.

    தூத்துக்குடி:

    தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நெல்லை, கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அப்போது அவருக்கு மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மழை வெள்ளத்தை எதிர்கொள்வதற்காக தமிழக அரசு ரூ.27 ஆயிரம் கோடி நிவாரண உதவி கேட்டும், ஒரு பைசா கூட நிதி அளிக்காத பா.ஜ.க.வை தமிழக மக்கள் வரும் தேர்தலில் புறக்கணிப்பார்கள்.

    இன்று தமிழகம் வரக்கூடிய பிரதமர் மோடி இந்த மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார். தமிழகத்தில் தி.மு.க.வுடன், காங்கிரஸ் நம்பிக்கையான உறவு கொண்டுள்ளது. இந்த கூட்டணி தொடரும். நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என அந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    போதைப் பொருட்கள் மத்திய அரசின் உளவுத்துறை போன்ற துறைகளின் கட்டுப்பாடுகளை மீறி குஜராத், ஆந்திரா, தமிழகம் என அனைத்து பகுதிகளுக்கும் வருகிறது என்றால் இதற்கு காரணம் பா.ஜ.க. தான். பா.ஜ.க. எல்லா மாநிலங்களையும் போதை பழக்கங்கள் உள்ள மாநிலமாக மாற்றுவதற்காக முயற்சிக்கிறார்கள்.

    பாரதிய ஜனதா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று கூறியது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்தது. எந்த வாக்குறுதியும் செயல்படுத்தவில்லை. ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழகத்திற்கு உள்ள நிதியை ஒதுக்கீடு செய்யாதது ஏன்?.

    ஊழலில் திளைத்துள்ள பா.ஜ.க.வினர் ஊழலைப் பற்றி பேச அருகதை இல்லாத கட்சி. எனவே பா.ஜ.க. அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    நாங்கள் தி.மு.க. கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் சுமூகமாக இருக்கிறோம். அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம். நாங்கள் 5 தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறோம். தி.மு.க.- காங்கிரஸ் உறவு நம்பிக்கையான உறவாக இருக்கிறது. எங்களை ஒருபோதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறைத்து மதிப்பிட மாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது விஜயதாரணி பா.ஜ.க.வில் சேர்ந்தது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரே தோல்வி பயத்தில் ஓட்டம் பிடிக்கிறார். இவர் போய் அங்கே என்ன பண்ணப் போகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றார்.

    • ராகுல், பிரியங்கா உள்பட நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகளை தேர்வு செய்யும் அதிகாரம் காங்கிரசின் மத்திய தேர்தல் குழுவுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
    • வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் தினத்தன்று தேர்தல் அறிக்கையையும் வெளியிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அட்டவணை இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதற்கு முன்னாக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட பாரதிய ஜனதா கட்சி தயாராகி உள்ளது. நேற்று முன்தினம் இரவு பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா மத்திய குழு விடிய விடிய ஆலோசனை நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது.

    பாரதிய ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியலில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்பட சுமார் 120 பேர் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் பாரதிய ஜனதாவுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் கட்சியும் தயாராகி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் மிக விரைவில் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளது.

    இதற்காக காங்கிரஸ் செயற்குழுவும் மத்திய தேர்தல் குழுவும் அடுத்த வாரம் டெல்லியில் கூட இருக்கின்றன. காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா, ராகுல் முன்னிலையில் நடக்கும் இந்த கூட்டங்களில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு ஏற்கனவே ஆய்வு குழு அமைக்கப்பட்டு இருந்தன. அந்த ஆய்வு குழுக்கள் ஒவ்வொரு தொகுதியிலும் ஆய்வு செய்து தலா 3 வேட்பாளர்களின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது.

    அந்த 3 பேரில் இருந்து ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய காங்கிரஸ் செயற்குழு மற்றும் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

    காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியலில் சுமார் 100 பேர் இடம் பெறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. முதல் வேட்பாளர் பட்டியலில் கேரளா, மத்திய பிரதேசம், கோவா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று தெரிகிறது.

    பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆய்வு குழுக்கள் வேட்பாளர்களை துல்லியமாக தேர்வு செய்து விட்டன. கூட்டணி கட்சிகள் இருக்கும் மாநிலங்களில் மட்டும் வேட்பாளர் பெயர் விவரங்கள் சற்று தாமதமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தடவை பெரும்பாலான தொகுதிகளில் கள ஆய்வு செய்து குழுக்கள் மூலம் வேட்பாளர்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த குழுக்கள் மாநில தலைவர்களிடமும், பொறுப்பாளர்களிடமும் பேசி ஆலோசித்துள்ளது.

    அதன் அடிப்படையில் காங்கிரஸ் மேலிடத்துக்கு ஆய்வு குழுக்கள் வேட்பாளர்களை பரிந்துரைத்து உள்ளன. காங்கிரஸ் சார்பில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். எனவே வேட்பாளர் தேர்வில் எந்த குழப்பமும் வராது. வேட்பாளர்கள் தேர்வு பயனுள்ளதாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் சுனில் தலைமையில் தேர்தல் நிபுணர்கள் நாடு முழுவதும் சர்வே நடத்தி அறிக்கை கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையிலும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். கேரளாவில் தற்போது இருக்கும் 15 காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம் என அந்த குழு பரிந்துரை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    உத்தரபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்களில் ஆய்வு குழுக்கள் அடுத்த வாரம் ஆய்வு செய்து வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை கொடுக்க உள்ளன. தோழமை கட்சிகள் வலிமையாக இருக்கும் மாநிலங்களில் இன்னும் 10 நாட்களில் இறுதி முடிவு செய்யப்பட்டு வேட்பாளர்களை அறிவிக்க உள்ளனர்.


    ராகுல், பிரியங்கா உள்பட நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகளை தேர்வு செய்யும் அதிகாரம் காங்கிரசின் மத்திய தேர்தல் குழுவுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் தினத்தன்று தேர்தல் அறிக்கையையும் வெளியிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. விவசாயிகள், ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்து காங்கிரஸ் வாக்குறுதிகளை வெளியிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே அடுத்த வாரம் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தேர்தல் தொடர்பான வியூகங்களும் வகுக்கப்பட உள்ளன. குறிப்பாக அதிரடி பிரசாரத்தை கையில் எடுப்பதற்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதனால் அடுத்த வாரம் நடை பெற உள்ள காங்கிரஸ் செயற்குழு மற்றும் மத்திய தேர்தல் குழு கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன.

    • திமுக-காங்கிரஸ் இடையே ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்தை நடக்க போகிறது.
    • தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இன்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை டெல்லி செல்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    திமுக-காங்கிரஸ் இடையே ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்தை நடக்க போகிறது.

    இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இன்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை டெல்லி செல்கிறார்.

    அங்கு டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை நேரில் சந்திக்கிறார்.

    • சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.
    • அவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி தலைவருமான சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்காக அவர் மனுதாக்கல் செய்தார். அப்போது அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் இருந்தனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வானார்.

    சோனியா காந்தி கடந்த 1999 -ம் ஆண்டில் இருந்து மக்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார். தற்போது முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகி இருக்கிறார்.

    • 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் பொது மக்களை சந்திக்க உள்ளனர்.
    • 750-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான 11 பேர் கொண்ட குழு பிப்ரவரி 5-ந் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை அறிந்து வருகின்றனர்.

    உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்-பாராளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ் நாட்டின் கருத்துக்கள் என்ற தலைப்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு கோரிக்கை மனுக்களையும் பெற்று வருகின்றனர்.

    பிப்ரவரி 5-ந் தேதி தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள், 6-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள், பிப்ரவரி 7-ந் தேதி மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், 9-ந்தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள், 10-ந் தேதி காலையில் கோவை, நீலகிரி, பிற்பகலில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள், 11-ந் தேதி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர்.

    அடுத்தக்கட்டமாக 23-ந் தேதி வேலூர், ஆரணியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவுள்ளனர். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் பொது மக்களை சந்திக்க உள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை எழுத்துப்பூர்வமாகவும், தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள், ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகளை அனுப்புவதற்கான முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த பதிவீடுகளுக்கான காலக்கெடு பிப்ரவரி 25-ந் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு மதிப்பீடு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பார்வைக்கு கொண்டு சென்று அதன்பிறகு அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கையாக தயாரிக்கப்பட உள்ளது.

    இப்போது வணிகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பெண்கள் நல அமைப்பு நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், ஓட்டல் உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், மாற்று திறனாளிகளின் அமைப்பு நிர்வாகிகள், மற்றும் பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் நேரிலும், எழுத்துப்பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஆன்லைன் மூலமாகவும் தங்கள் கோரிக்கைகளை அளித்து வருகின்றனர்.

    இதுவரை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சந்தித்துள்ளனர். 750-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

    கோரிக்கைகள் தொடர்பாக தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் மக்களிடம் இருந்து வந்துள்ளதுடன், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்; சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு 500க்கும் மேற்பட்ட கடிதங்களும் பெறப்பட்டு உள்ளதாக இக்குழுவினர் தெரிவி்த்துள்ளனர்.

    • 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக சுமார் ரூ. 2½ கோடி வழங்கினர்.
    • பல்வேறு சிறப்பு அம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை ம.தி.மு.க வரவேற்கிறது.

    நெல்லை:

    ம.தி.மு.க. நெல்லை மண்டலம் சார்பில் தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மஹாலில் இன்று நடைபெற்றது.

    இதில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தேர்தல் நிதியினை பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக சுமார் ரூ. 2½ கோடி வழங்கினர்.

    நெல்லை மத்திய மாவட்டம் சார்பில் மட்டும் ரூ.35 லட்சம் நிதியாக வழங்கப்பட்டது. இதில் துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் கே.எம்.ஏ. நிஜாம், புதுக்கோட்டை செல்வம், ஆர்.எஸ். ரமேஷ், சுதா பாலசுப்பிரமணியன், ராம.உதயசூரியன், வக்கீல் வெற்றிவேல், ரவிச்சந்திரன், வேல்முருகன், கண்ணன், பகுதி செயலாளர் பொன் வெங்கடேஷ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான், செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலை நாட்ட சிறப்பான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தில் முழுமையாக வறுமையை ஒழிக்க தாயுமானவர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடிசை இல்லா தமிழகம் என்ற திட்டத்தை நிறைவேற்ற கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

    தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதுடன் வேலை வாய்ப்பு உருவாக்க பல ஜவுளி பூங்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை ம.தி.மு.க வரவேற்கிறது. மாற்றான் தாய் மனப் பான்மையுடன் மத்திய அரசு தமிழகத்தை நடத்தி வருகிறது. கடுமையான நிதி நெருக்கடி, மத்திய அரசின் குறுக்கீட்டை கடந்து தமிழக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.


    மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்காத காரணத்தால் மாநில அரசே நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தமிழகத்திற்கு பெரிய நிதி நெருக்கடி உள்ளது. மழை வெள்ளத்தால் தமிழகத்திற்கு ரூ. 37 ஆயிரம் கோடி நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மின்வாரியம் கடுமையான நஷ்டத்தில் இயங்குகிறது. கடந்த ஆண்டு மட்டும் 17 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை தமிழக அரசு தான் செலுத்தி உள்ளது.

    எதிர்கட்சிகளை தவிர அனைவரும் இந்த பட்ஜெட்டை பாராட்டுகின்றனர். மழை வெள்ள பாதிப்பு, ஜி.எஸ்.டி. வரி வருவாய் இழப்பு, நிலுவை தொகை வராதது போன்றவையே தமிழகத்தின் வருவாய் குறைய காரணம். நிதி பற்றாக்குறை தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

    தமிழக அரசு, முதலமைச்சரின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதியிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    விருதுநகர் தொகுதி, திருச்சி மையப்படுத்திய தொகுதி, சென்னையை மையப்படுத்திய தொகுதி, ஈரோட்டை மையப்படுத்திய தொகுதி என 4 பாராளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

    எண்ணிக்கை முடிவான பின்னர் தொகுதி குறித்து ம.தி.மு.க. அறிவிக்கும். விருதுநகர் தொகுதியில் நான் (துரை வைகோ) போட்டியிட வேண்டும் என்பது ம.தி.மு.க. தொண்டர்களது விருப்பம்.

    கூட்டணி தலைவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்து வேட்பாளர் அறிவிப்பு இருக்கும். இந்த முறை எங்களது பம்பரம் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. தலைமையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் கட்சி எனக்கு பல்வேறு பொறுப்புகளை தந்திருக்கிறது.
    • காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (புதன்கிழமை) மாலையில் சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் பதவியேற்கிறார். கே.எஸ்.அழகிரி அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.

    கே.எஸ்.அழகிரி திடீரென்று மாற்றப்பட்டதற்கு, பல்வேறு காரணங்கள் வலைதளங்களில் உலா வருகிறது. இதுபற்றி கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நான் தூய காங்கிரஸ்காரனாக இத்தனை ஆண்டு காலம் பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். காங்கிரஸ் கட்சி எனக்கு பல்வேறு பொறுப்புகளை தந்திருக்கிறது.


    மிகவும் உயர்வான பொறுப்பாக மாநில தலைவர் பதவியை கட்சி மேலிடம் வழங்கியது. 50 ஆண்டுகாலத்தில் மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோருக்கு பிறகு 5 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவர் பதவியில் நீடித்தவன் என்ற மனநிறைவுடன் இருக்கிறேன்.

    பொதுவாகவே இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் புதிய தலைவர் பற்றிய பேச்சு அடிபடும். ஆனால் என்னை பொறுத்த வரை கடந்த 3 மாதமாகவே புதிய தலைவர் நியமனம் பற்றி கட்சி மேலிடம் ஆலோசனை செய்து வந்தது. இந்த மாற்றம் என்பது இயல்பான ஒன்றுதான். நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளேன்.

    கட்சிக்குள் ஏதாவது பிரச்சினைகள் உருவாக்கலாமா? என்று வதந்திகளை பரப்புகிறார்கள். உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் இந்த தவறான தகவல்களை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். கண்டு கொள்ளவும் மாட்டார்கள்.

    காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜிதேந்திரசிங் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
    • கமல்நாத் எத்தகைய முடிவு எடுப்பார் என்று தெரியாததால் குழப்பம் நீடிக்கிறது.

    மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் தனது மகன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேரப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கமல்நாத்தின் உதவியாளரும், காங்கிரஸ் தலைவர்களும் மறுத்தனர். என்றாலும் கமல்நாத்தும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து டெல்லியில் தங்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்யும் முயற்சியை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர்.


    காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜிதேந்திரசிங் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் போபால் சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களிடம் தற்போதைய பிரச்சினைகள் பற்றி விரிவாக பேசினார். காங்கிரசில் இருந்து விலக வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். என்றாலும் கமல்நாத் எத்தகைய முடிவு எடுப்பார் என்று தெரியாததால் குழப்பம் நீடிக்கிறது.

    • 49.95 லட்சம் ரூபாய் மதிப்பில் 1.3 கிலோ தங்கம், 88 கிலோ வெள்ளியும் உள்ளது.
    • இத்தாலியில் பரம்பரை வீடு உள்ளதாகவும், அந்த சொத்தில் கிடைக்கும் பங்கீன் மதிப்பு 26.83 லட்சம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், மக்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி வருகிற பராளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதற்காக கடந்த புதன்கிழமை (நேற்றுமுன்தினம்) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தனது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் மொத்த சொத்த மதிப்பு 12.53 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார்.

    கைவசம் 90 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மொத்த சொத்து மதிப்பு (அசையும் மற்றும் அசையா சொத்து) 12 கோடியே 53 லட்சத்து 76 ஆயிரத்து 822 ஆகும்.

    2014-ல் அவருடைய சொத்து மதிப்பு 9.28 கோடி ரூபாயாக இருந்தது. 2019-ல் 11.82 கோடி ரூபாயாக அதிகரித்தது. தற்போது 2024-ல் 12.53 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

    அசையும் சொத்து 6.38 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார். ஜூவல்லரி, ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் இருந்து கிடைக்கும் ராயல்டி, முதலீடுகள், பாண்டுகள், வங்கி டெபாசிஸ்ட், கையில் இருக்கும் ரொக்கத்தொகை ஆகியவை அடங்கும்.

    49.95 லட்சம் ரூபாய் மதிப்பில் 1.3 கிலோ தங்கம் இருப்பதாகவும், 88 கிலோ வெள்ளி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வெள்ளியின் மதிப்பு 57.2  லட்சம்  ரூபாய் ஆகும்.

    இத்தாலியில்  பரம்பரை  வீடு உள்ளதாகவும், அவற்றில் தனக்கான பங்கீன் மதிப்பு 26.83 லட்சம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார். 2014 தேர்தலில் இதன் மதிப்பு 19.9 லட்சம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    • முதுமை மற்றும் உடல்நல பிரச்சினைகளால் வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
    • உங்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு இருக்காது. இருப்பினும், எனது இதயமும், ஆன்மாவும் எப்போதும் உங்களுடனே இருக்கும்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, கடந்த 2004-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.

    கடைசியாக, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலிலும் ரேபரேலியில் வெற்றி பெற்று எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே, இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் மக்களவை தேர்தல் வரும் நிலையில், சோனியாகாந்தி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாகும் மாநிலங்களவை இடத்துக்கு அவர் போட்டியிடுகிறார். இதனால், மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் என்பது உறுதியானது.

    இந்நிலையில், தனது ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு சோனியாகாந்தி இந்தியில் எழுதப்பட்ட ஒரு உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் இன்று அடைந்திருக்கும் நிலைக்கு காரணம் நீங்கள்தான் என்பதை பெருமையாக தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நம்பிக்கையை கவுரவிக்க என்னால் இயன்ற அளவுக்கு செயல்பட்டுள்ளேன்.

    தற்போது முதுமை மற்றும் உடல்நல பிரச்சினைகளால் வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன். இந்த முடிவால், உங்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு இருக்காது. இருப்பினும், எனது இதயமும், ஆன்மாவும் எப்போதும் உங்களுடனே இருக்கும்.

    கடந்த காலத்தை போலவே எதிர்காலத்தில் எனக்கும், என் குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ரேபரேலி தொகுதியில் சோனியாகாந்தியின் மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.
    • ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

    காங்கிரஸ கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி தலைவருமான சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார் என இரண்டு நாட்களாக செய்திகள் வெளியாகின.

    தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. ராஜஸ்தானில் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதற்கான மனுத்தாக்கல் செய்ய இன்று காலை 10 மணியளவில் ராஜஸ்தான் வந்தடைந்தார். அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் வந்தனர்.

    ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் வந்திருந்தனர்.

    பின்னர் சரியாக 12 மணியளவில் ராஜஸ்தான் சட்மன்ற வளாகம் வந்தடைந்தார். அதன்பின் மாநிலங்களவை எம்.பி. போட்டிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    சோனியா காந்தி கடந்த 1999 -ம் ஆண்டில் இருந்து மக்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார். தற்போது முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். அவரது உடல்நிலை காரணமாக மாநிலங்களவை எம்.பி. ஆக முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×